பள்ளி ஆளுநர் பதவி

உடன்பிறப்பே

பார்த்தாயா இந்த நண்பர்களின் அன்பை. பள்ளியின் ஆளுநர் பதவிக்காக நான் போட்டியிட வேண்டுமாம்.

பள்ளி ஆளுநர் பதவியென்பது சிவப்பு விளக்கு சுழல நகர உலா வந்து, கிண்டி மாளிகையில் ஓய்வெடுப்பதல்ல என்பதை நீ அறிந்திருக்க மாட்டை என நான் அறிவேன். ஆளுநர் பதவிக்காக போட்டியிட என்னை ஒருவர் முன்மொழிய வேண்டுமாம். மற்றொருவர் அதை வழி மொழிய வேண்டுமாம். பிறகு தேர்தல் நடத்தி ஆளுநரை தேர்ந்தெடுப்பார்களாம்.

தேர்தலை எப்படி அணுகுவது என்று பெரியாரும், அண்ணாவும் இன்னும் பலரும் நமக்கு கற்றுத் தந்த பாடங்கள் தான் எத்தனை எத்தனை. நமது புறநானுற்றுப் புலிப்படை இங்கிலாந்தின் வீதிகளில் நடந்தால் வெற்றி முரசு கொட்டிடாதா? வீணர்களின் கொக்கரிப்பு அடங்கிடாதா? இல்லையென்றால் நமது கழக கண்மணிகளுக்கு திருமங்கலம் சூத்திரம் தான் தெரிந்திடாதா?

பள்ளி ஆளுனராகி விட்டால் பள்ளி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டுமாம். கழக வளர்ச்சிக்காக பாடுபட்ட நாம் குடும்ப வளர்ச்சிக்காக.. ச்சே.. பள்ளி வளர்ச்சிக்காக பாடுபட மாட்டோமா என்ன? இந்த நேரத்தில் நீ என்ன நினைக்கிறாய் என்பதை நான் அறிவேன் உடன்பிறப்பே. நான் ஆளுனரனவுடன், என் இளவல், கழக தளபதி, அனிருத்-ஐ துணை ஆளுநராக நியமிக்க நீ விரும்புகிறாய் என்பதை நான் அறிவேன். இந்த அன்புக்காக என்ன கைமாறு செய்யப் போகிறான் இந்த சக்கரபாணி? எப்படி அடக்கப் போகிறான் இந்த புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை?

ஆப்பு வாங்குவது யாராக இருப்பினும், ஆப்படிப்பது நாமாக இருக்க வேண்டும் என்று தானே அய்யன் வள்ளுவன் எனக்கு கற்றுத் தந்திருக்கிறான்? இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே?

அன்புடன்
ச. ச.