கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னரே எழுத நினைத்திருந்த பதிவு. இப்பொழுது தான் எழுத நேரம் வாய்த்தது.
—–
“நான் இந்த வருஷம் தீபாவளிக்கு திருச்சி வரேன். நீயும் அங்க தானே இருப்பே? மீட் பண்ணுவோமா?” - நண்பர்கள் இருவருக்குள் மேற்கண்டவாறு தொடங்கிய ஒரு சாதாரண மின்னஞ்சல் உரையாடல் வெகு சில மணி நேரங்களில் வளர்ந்து, பெரியவனாகி பல்லாண்டுகளுக்கு பின்னர் கல்லூரி நண்பர்கள் பலர் கூடி, சந்திக்கும் வாய்ப்பை உருவாக்கித்தந்தது.
திருச்சி தேசிய மாலை நேரக்கல்லூரியில் 1996-ஆம் ஆண்டு, இளம் அறிவியல் பட்டத்திற்கான மூன்றாண்டு படிப்பை நிறைவு செய்தவுடன் ஒரு உச்சி வெயில் நாளில் நடந்த பிரிவு உபசார விழாவின் பொழுது அந்த அளவிலான அடுத்த சந்திப்பு நடக்க பதினொரு ஆண்டுகள் ஆகுமென நினைக்கவில்லை. நாங்கள் படித்து முடித்த காலத்தில் மின்னஞ்சல், ஓர்குட் போன்ற சங்கதிகள் ஏதும் வந்திருக்கவில்லை. கல்லூரிப் படிப்பு முடிந்த வெகு சில மாதங்களிலேயே நெருங்கிய நண்பர்கள் தவிர மற்றவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு விட்டுப் போனது. மிஞ்சிப் போனால் 10 பேருக்கு மேல் எவரையும் இப்பொழுது தொடர்பு கொள்ள முடியாது என நினைத்துக் கொண்டிருந்த பொழுது, நண்பன் ஒருவன் சலிக்காமல் ஒவ்வொருவருக்கும் கைப்பட கடிதமெழுதி தொடர்பு கொண்டு மிக நேர்த்தியாக ஒருங்கிணைத்தான்.
தீபாவளிக்கு மறுநாள் கல்லூரியிலேயே அவரவர் குடும்பத்தினருடன் சந்திப்பதென முடிவாயிற்று. கல்லூரி உள்ள திண்டுக்கல் சாலையில் நுழையும் போதே சிலிர்ப்பாக இருந்தது. 11 வருடங்களில் கல்லூரி நிறைய மாறிவிட்டிருந்தது. எல்லாம் மகிழ்ச்சி தரும் நிறைவான மாற்றங்கள். நாங்கள் இறுதி வருடம் படித்த வகுப்பறையை எங்கள் சந்திப்புக்கென திறந்து வைத்திருந்தார்கள். நான் வழக்கமாக உட்காரும் கடைசிக்கு முன் வரிசையில் அமர்ந்தவுடன் மலர்ந்த நினைவுகளை வைத்து ‘ஆட்டோகிராப்-2′ எடுத்துவிடலாம். மர பெஞ்சுகளில் வழக்கம் போல பல பெண்களின் பெயர்கள். பெயர்களில் மட்டும் மாற்றம். அவ்வளவே. வகுப்பில் படித்த பாதிக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். படிக்கும் சமயத்தில் ஆரம்ப கால தனுஷ் போல ஒல்லிப்பிச்சானாக இருந்த பசங்களெல்லாம் தடி மாடுகளாக மனைவி, மக்களுடன் வந்து நின்றார்கள். அனைவர் முகத்திலும் பரவசம். பசங்களின் உருவம் தான் மாறியிருந்ததே தவிர பேச்சும், செய்கைகளும் அதே மாதிரி தான் இருந்தன. Boys are always boys என்பதை மீண்டும் நிரூபித்தோம்.
இந்த சந்திப்பிற்கு எங்களுக்கு பாடம் நடத்திய, நாங்கள் மிகவும் மதிக்கின்ற இரண்டு விரிவுரையாளர்களையும் அழைத்திருந்தோம். விடுமுறை நாள் என்பதை பொருட்படுத்தாது நெடுந்தொலைவிலிருந்து அவர்களும் வந்திருந்தனர். சொல்லப் போனால் எங்களை விட அவர்களே மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டனர். அவரவர் பார்க்கும் வேலை, குடும்ப விவரங்கள், கல்லூரி கால காதல் என வாய் வலிக்க வலிக்க பேசினாலும் சலிக்கவேயில்லை. பதின்ம வயது முரட்டுத்தனத்துடன், அனைவரையும் எகிறி, “நீயெல்லாம் எங்கே உருப்பட போறே” என்று ஏகமனதாக அனைத்து ஆசிரியர்களிடமும் அவ்வப்போது ஆசீர்வாதம் வாங்கிய நண்பனொருவன் மிக மென்மையானவனாக மாறி, சிறு நிறுவனமொன்றை தொடங்கியிருப்பதை கூறியது அனைவருக்கும் இனிய அதிர்ச்சி. இரண்டு மணி நேரம் பேசிக் கலைவோம் என எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு முழுநாள் நீடித்தது தீபாவளி பட்சணங்களை விட அதிகமாக இனித்தது. இதை சாத்தியமாக்க கை வலிக்க அனைவருக்கும் லெட்டர் எழுதியவனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
மகிழ்ச்சிகரமான விஷயங்கள் ஒரு புறமிருக்க, every coin has got its other side. எங்கள் வகுப்பில் படித்த பலர் வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் நல்ல வேலை, வளங்களுடன் இருந்து வந்தாலும், வாழ்வின் மறுபக்கத்தை தினம் தினம் சந்தித்துக் கொண்டிருக்கும் பலரில் எங்கள் வகுப்பு நண்பர்கள் சிலரும் உள்ளனர் என்பதையும் இந்த சந்திப்பு மூலம் தெரிந்து கொண்டேன். துணிக் கடைகளிலும், பாத்திரக் கடைகளிலும் எடுபிடி வேலைகளில் மாதம் இரண்டாயிரம் ரூபாய் ஊதியம் பெற்று வாழ்க்கையை ஓட்டும் சிலரும் எங்களுடன், அதே வகுப்பறையில் தான் அமர்ந்து படித்தனர் என்பதை அறிந்த பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த நண்பர்களைக் கண்டறிந்து உதவிடும் நோக்கத்தோடு சில திட்டங்களை அன்று யோசித்தோம். ஆனால், அன்றிருந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையில் முடிவேதும் எடுக்க இயலாமல் போய்விட்டது. இது நடந்து ஒரு வருடம் வரை இதை நாங்கள் மறந்து விட்டது எங்களது பொறுப்பின்மை. இப்பதிவை திடீரென உயிர்ப்பித்தது போல், இந்த விஷயத்திற்கும் விரைவில் செயல் வடிவம் கொடுப்போம் என நம்புவோம்.
இவ்வாறான அடுத்த சந்திப்பு என்று, எங்கு அமையும் எனத் தெரியவில்லை. அது நிகழும் வரை 2007 வருட தீபாவளி சந்திப்பு நிகழ்வுகள் மனதில் நெடு நாள் நிலைத்து நிற்கும். அடுத்த முறை சந்திக்கும் பொழுது எவருக்கும், எக்குறையுமின்றி இதை விட மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் அமையும் என உறுதியாக நம்புகிறேன்.
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.